பகுதி 1:- இயற்கை நலவாழ்வியல் புத்தகங்கள்.
இயற்கை நலவாழ்வியல் தொடர்பான புத்தகங்களைப் பற்றி அறிமுகம் செய்வதற்காக இந்த பதிவினை தொடங்கி உள்ளேன்.
நான் படித்த புத்தகங்களில் இருந்து நான் ரசித்த சுவையான சில பகுதிகளை பதிவிடுகிறேன்.
புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர் பெயர், புத்தகத்தின் மதிப்பு, மற்றும் கிடைக்கும் முகவரி போன்றவற்றையும் காணலாம்.
இந்த வகையில் நான் படித்து பெரிதும் விரும்பிய ஒரு புத்தகம் பற்றி இங்கே கூற விரும்புகிறேன்.
1. புத்தகத்தின் பெயர்: இயற்கை வாழ்வியல் கலை. (An Art of Natural Life)
2 . ஆசிரியரின் பெயர்: பிரம்மஸ்ரீ கோ.எத்திராஜ்
3. பதிப்பக முகவரி: சித்த வித்தை தவ மையம், சித்த வித்யார்த்தி ஃபௌண்டேஷன், சித்தர் வழிச் சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
4. புத்தக விவரம்: இயற்கை நலவாழ்வியல் பற்றிய அற்புதத் தொகுப்பு - 103 பக்கங்கள்,
5. விலை ரூ.60 மட்டும். (இந்த பணத்தை தவ மைய வளர்ச்சிக்காக பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் கூறி உள்ளார்)
புத்தகத்தில் இருந்து சில சுவையான பகுதிகளை வெளியிடுகிறோம்.
இயற்கை அன்னையின் பேராற்றலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சகல ஜீவ ராசிகளுக்கும் இந்நூல் சமர்ப்பணம் என்று துவங்கும் நூல் ஆசிரியரின் முன்னுரையிலிருந்து:
''அன்றாட வாழ்க்கையில் இன்றைய நவீன மனித குலம் நெறியற்ற, முறையற்ற தனது உணவுப் பழக்கத்தினால் தன்னைத் தான் இழந்து கொண்டே வருகிறது.''
''உடல் பிரச்சினைகளோடும், மனக் குழப்பங்களோடும், வியாதியைப் பற்றிய சந்தேகங்கலோடும், பக்குவமில்லாத கேள்விகளோடும், நிறைந்து கிடைக்கும் நிறைவின்மைகளோடும் வாழப் பழகிவிட்ட மனித சமுதாயம், அவைகளிலிருந்து தம்மை முழுமையாக விடுவித்துக் கொள்ளவும், வருங்காலத் தலைமுறைகளுக்கு தெளிவான தீர்வினை அளிக்கவும் தவறிவிட்டது.''
மனிதன் ''பொருளாதாரத்தில் சில இலக்குகளை இவனாகவே நிர்ணயம் செய்து கொண்டு, உடல் பற்றியும், உயிர் பற்றியும் எந்த ஒரு சிந்தனையும், ஆலோசனையும் இன்றி வாழ்க்கையை இயந்திரத்தனமாக மாற்றியமைத்துக் கொண்டான். போருலாதாரங்களைத் தேடிக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற தவறான கொள்கையையும் வளர்த்துக் கொண்டான்....
நிர்ணயித்த பொருளாதார இலக்கை அடைந்த பிறகு, மனிதன் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது, திரும்பப் பெறவே முடியாத பொக்கிஷங்களான அமைதியையும், ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் இழந்ததாகவே அவன் அனுபவத்தில் உணருகிறான்.....''
''இழந்தவற்றைஎல்லா திரும்பப் பெறுகின்ற முயற்சியின் போது, அவன் நம்பியிருந்த பொருளாதாரமும் அவனைக் கைவிட்டு விடுகிறது.'' ......
''வாழ்வதற்கு பொருள் அவசியம் வேண்டும் என்ற மனிதன், ''வாழ்வதிலும் பொருள் வேண்டும்'' என்பதை உணர்ந்திருக்கவில்லை. அதனால் தான் அவனுக்கு இவ்வளவு தொல்லை''.
''சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிப்பதில்லை. தீர்வுகள் இல்லாமல் எந்தப் பிரச்சினைகளும் உருவாவதில்லை. மனித உடல் மற்றும், மனம் சார்ந்த எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் அதற்கு ஒரே தீர்வு.
முழு இயற்கை வாழ்வியல் முறையில்
வாழ முயற்சிப்பது தான்.
''இயற்கை வாழ்வியல் கலை என்பது 500 வருடங்களோ, அல்லது 1000 வருடங்களோ வாழ்வதற்கான வழி முறை அல்ல. மனிதன் வாழும் வரை எவ்வித நோய்களுமின்றி, மருந்துகளும் இன்றி, துன்பங்களின்றி பேரானந்த வாழ்வு வாழ்வதற்கான முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.''
''உலகோரைத் திருத்தவோ அல்லது எனது சுயகருத்துக்களை உங்களிடம் திணிப்பதோ இந்நூலின் நோக்கமில்லை! அது நம்முடைய வேலையும் அல்ல! உலகோருக்கு தெரிவிப்பது நமது கடமை! திருந்துவதும் திருந்தாமல் போவதும் அவர்களது உரிமை! உண்மையில் நம்மை நாம் திருத்திக் கொள்வதில் தான் பிறவியின் இரகசியம் ஒளிந்திருக்கிறது!''
அன்புடன்,
கோ.எத்திராஜ்
சின்னாளப்பட்டி.
நூலாசிரியர் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பட்டியலிட்டு விட்டு பின்னர் அதோடு விட்டு விடாமல் எளிய முறையிலான தீர்வுகளையும் இந்த நூலில் சொல்லுகிறார்.
புத்தகம் பற்றிய செய்திகளையும், சில பகுதிகளையும் வெளியிட அனுமதி தந்தபிரம்மஸ்ரீ கோ. எத்திராஜ் அவர்களுக்கு நன்றி.
முக்கியத் தலைப்புகளில் ஆசிரியரின் தீர்வுகள் பற்றிய சுருக்கப்பட்ட விவரங்கள் கொண்ட பதிவுகள் தொடரும்.
பதிவினைப் படித்து வரும் ஆர்வலர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
ஆசிரியர் ஒரு பி.இ. பட்டதாரி இளைஞர். வடகரை சிவானந்தரின் தவ வாழ்க்கை நெறியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திண்டுக்கல் அருகாமையில் ஆத்தூர் அருகே இயற்கை சூழலில், கொடைக்கானல் மலைச் சாரலில் தவமையம் அமைத்து இயற்கை நலவாழ்வினை வாழ்ந்து வருபவர். வடகரை சிவானந்தரின் சித்தவித்தையை ஆர்வம் உள்ளோருக்கு கற்றுத் தந்து வருகிறார்.
இயற்கை நலவாழ்வியல் பற்றிய அரிய கருத்துக்கள் கொண்ட இப்புத்தகத்தினை ஆசிரியர் எந்தக் கடையிலும் விற்க ஏற்பாடு செய்யவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் ஆசிரியரை தபால் மூலம் தொடர்பு கொண்டு புத்தகத்தினைப் பெறலாம். லாப நோக்கில்லாமல் இந்தப் புத்தகத்தினை வெளியிட்டிருப்பதாலும், தவமைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு புத்தகத்தின் விலை குறிக்கப்பட்டிருப்பதாலும், ஆர்வம் கொண்ட நண்பர்கள் பத்து அல்லது இருபது புத்தகங்களாக மொத்தமாக வாங்கி தங்களுக்குள் விநியோகித்துக் கொள்வது ஒரு சிறந்த முறை. மற்றும் பிறந்த நாள், மண நாள் வாழ்த்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வாழ்த்து சொல்வது போன்ற நேரங்களில் இந்தப் புத்தகத்தை பரிசளிப்பது மற்றொரு சிறந்த முறை.
நன்றி.
லேபிள்கள்: இயற்கை நலவாழ்வியல், இயற்கை வாழ்வியல் கலை. An Art of Natural Life, கோ.எத்திராஜ்